Home

Wednesday, 6 February 2013

சிறுமி கடத்தலை தட்டிக் கேட்ட உறவினர் கொலை; துணை போகும் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?: பாமக கேள்வி


சிறுமி கடத்தலை தட்டிக் கேட்ட உறவினர் கொலை; துணை போகும் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? என்று விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று நாடகத் திருமணம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. பெண் வீட்டாரை மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்குடன் தான் இத்தகைய திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள போதிலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதையே பிழைப்பாக கொண்டுள்ள ஒரு கும்பல், இத்தகைய சட்ட விரோத செயல்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகிலுள்ள தொட்டனஹள்ளி கிராமத்தில் வாழும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் 14 வயது மகள் கல்யாணியை அருகிலுள்ள அகலக்கோட்டை கிராமத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திம்மராயப்பனின் மகன் மஞ்சு என்பவர் திருமணம் செய்வதாக ஆசை காட்டி தமது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் உதவியுடன் பெங்களூருக்குக் கடத்திச் சென்று விட்டார். 14 வயதே ஆன மைனர் சிறுமியை நாடகத் திருமணம் செய்யும் நோக்குடன் கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் பெங்களூருக்கு கடத்திச் சென்றிருப்பதை அறிந்த பெற்றோரும் உறவினர்களும் விரைந்து சென்று சிறுமியை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞன் மஞ்சுவையும் பாதுகாப்பாக காவல்துறையிடம் ஒப்படைக்கும் நோக்குடன் அழைத்து வந்துள்ளனர்.

நேற்று மாலை தளி அருகே வந்து கொண்டிருக்கும்போது அவர்களை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கும்பல் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியிருக்கிறது. சிறுமியின் பெரியப்பாவை கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்துவிட்டு, இளைஞன் மஞ்சுவை அழைத்துச் சென்றிருக்கிறது. மைனர் சிறுமியை நாடகத்திருமணம் செய்து பணம் பறிக்கும் நோக்குடன் கடத்திச் சென்றதுடன், அச்சிறுமியின் உறவினரை கட்டப் பஞ்சாயத்துக் கும்பல் கொடூரமான முறையில் படுகொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவின் சார்பில் கடுமையாக கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படுகொலை தொடர்பாக இதுவரை 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது போதுமானதல்ல. இதன் பின்னணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கும்பலையும் கைது செய்யவேண்டும். தில்லியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அண்மையில் பிறப்பித்த அவசர சட்டத்தின்படி அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறையினரை வலியுறுத்துகிறேன்.

நாடகத் திருமணங்களுக்கும், அதற்காக பெண்கள் கடத்தப்படுவதற்கும் காரணம் இத்தகைய செயல்களை தமிழகத்தில் உள்ள தி.மு.க., இடது சாரிகள், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் ஆதரிப்பது தான். அனைத்து சமுதாய மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் குரல் கொடுத்ததற்காக மருத்துவர் அய்யாவை விமர்சித்த இந்தக் கட்சிகள், நாடகத்திருமணம் செய்வதற்காக 14 வயதே ஆன சிறுமியை கடத்திச் செல்வதையும், தட்டிக் கேட்ட உறவினரை படுகொலை செய்ததையும் ஆதரிக்கின்றனவா? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

-
இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment